அன்னையும் சந்நியாச செம்மல்களும்

அன்னையும் சந்நியாச செம்மல்களும்

HM22_1
ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னையிடம்,உனக்கு மணி மணியான குழந்தைகளை விட்டுச் செல்கிறேன். கடுந்தவம் புரிந்தாலும் அத்தகைய குழந்தைகளைப் பெறுவது அரிது” என்றார்.

அன்னைக்கும் குருதேவரின் சீடர்களுக்கும் இருந்த உறவு முறை பெருமை மிக்கது. குருதேவரின் மறைவுக்குப் பின் ஒரு நாள் அவர் அன்னை முன் தோன்றி யோகினுக்கு மந்திர தீட்சை தரும் படி கூறினார். அன்னை தயங்கினார்.
‘இதென்ன? அதற்குள் சீடர்களைச் சேர்க்கத் தொடங்கிவிட்டார்!’ என ஊரார் பழிப்பர் என்ற நாணம் வேறு.

ஆனால் குருதேவர் தொடர்ந்து மூன்று நாட்கள் காட்சி தந்து யோகினுக்கு மந்திர தீட்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். யோகினுக்குரிய மந்திரத்தையும் தெரிவித் தார். இதற்கு முன் அன்னை யோகினுடன் பேசியதுகூட இல்லை. எனவே பக்தை யோகின்மாவின் துணையுடன் தீட்சை அளிக்கும்படி குருதேவர் தெரிவித்தார்.

அன்னை யோகின்மாவிடம் யோகினை விசாரிக்கும்படி கூறினார். குருதேவர் காட்சி யளித்து அன்னையிடம் தீட்சை பெறுமாறு கூறியதாக யோகினும் தெரிவித்தார். பின் யோகின் அன்னையின் கருணைக்குப் பாத்திரமானார்.

ஒருமுறை குருதேவரின் ‘அற்புதமான’ சுவாமி அத்புதானந்தர் பஞ்சவடியில் தவம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த ஸ்ரீராமகிருஷ்ணர் அவரிடம், நீ யாரைக் குறித்துத் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறாயோ, அவள் நஹபத்தில் சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவி செய். அதனால் நீ தவம் செய்வதைக் காட்டிலும் மிகுந்த பலனை அடைவாய்” என்றார்.

குருதேவர் தம் சீடர்களுக்கு அளிக்கப்படும் இரவு உணவைப் பற்றிக் கவனமாய் இருப்பார்.
அன்று பாபுராமிற்கு (சுவாமி பிரேமானந்தர்) குறித்த அளவைவிட அன்னை அதிகமாக உணவளித்தார் என்றறிந்த குருதேவர் அவரைக் கடிந்து கொண்டார்.

தாய்மையின் ஒரு பரிமாணம் தாக்கப்பட்டதைப் பொறுக்காத அன்னை, இரண்டு சப்பாத்திகள் அதிகம் உண்டதற்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அவன் சாப்பிடுவதைப் பெரிதுபடுத்தாதீர்கள். அவர்களின் ஆன்மிக நலனை நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றார். அன்னை தம் சீடர்களின் ஆன்ம நலனையும் கவனித்துக் கொள்வார் என்று உணர்ந்த குருதேவர் அனைத்தையும் வெல்லும் தாய்மையை வணங்கி நின்றார்.

குருதேவரது திருவிளையாடலைத் தொடரும் பொறுப்பு அன்னையிடமும் பிள்ளைகளிடமும் வந்து சேர்ந்தது. குருதேவரின் விருப்பப்படி அன்னை காமார்புகூரிலும் பிள்ளைகள் பல்வேறு இடங்களிலும் தவத்தில் மூழ்கினர்.
ஸ்ரீராமகிருஷ்ண சங்கத்திற்கு குருதேவர் விதையிட்டார் என்றால், அன்னை சங்கத்தைப் பெரும் மரமாக வளர்த்தார் எனலாம்.

தாய்மையின் பிரவாகத்தை கயையில் அவரது பிரார்த்தனை மூலம் அறிய முடிகிறது.
கண்ணீர் மல்க குருதேவரிடம், உங்களையே நம்பி உங்களின் பெயரால் உலகைத் துறப்பவர்கள் அன்றாடத் தேவைக்கு அல்லல் படக் கூடாது. உங்களுடைய லட்சியங்களையும் எண்ணங்களையும் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ நினைப்பவர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ வேண்டும்.

உலக மக்கள் அவர்களிடம் வந்து உங்களைப் பற்றிக் கேட்டு அறியாமை இருளிலிருந்து விடுபட்டு அமைதி பெற வேண்டும். அதன் பொருட்டே நீங்கள் வந்திருக்கிறீர்கள். அவ்வாறு இருக்க என் பிள்ளைகள் அங்குமிங்கும் அலைவதைக் காணச் சகிக்கவில்லை!” என்று வருந்தினார்.

அந்தப் பிரார்த்தனையே சுவாமி விவேகானந்தர் பேலூர் மடம் நிறுவ அஸ்திவாரமாக அமைந்தது. அன்னை தம் பிள்ளைகளுக்கு நிரந்தரமான இடம் வாங்கப்பட்டதை அறிந்து மகிழ்ந்தார்; வாழ் நாள் முழுவதும் சங்கம் வளர்வதற்குப் பக்கபலமாய் இருந்தார்.

குருதேவரின் கருத்துகளைப் பரப்புவதில் தோன்றிய முரண்பாடுகளை உடனுக்குடன் களைவதில் அன்னை பெரும் பங்கு வகித்தார். சுவாமிஜி ஏற்படுத்திய சேவைப் பணிகளை முதலில் அவரது சகோதரச் சீடர்கள் உட்படப் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அன்னை, நரேன் குருதேவரின் கைக் கருவி. நரேனின் மூலம் அவரே தம் பணிகளைப் புரிகிறார். ஆகவே நரேன் எது செய்தாலும் அதெல்லாம் நன்மைக்கே” என்றார்.

ஒருமுறை குருதேவர் அத்வைதியா என்ற சந்தேகம் சீடர்களிடையே தோன்றியது. அன்னை, நம் குரு அத்வைதியே. அவரது சீடர்களாகிய நீங்களும் அத்வைதிகளே!” என உறுதிப்படுத்தினார்.

சீடர்கள் அனைவரும் அன்னையைத் தங்களது சொந்தத் தாயாகவும் குருவாகவும் ஜகன்மாதாவாகவும் கண்டனர். தமது பரிவ்ராஜக வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் சுவாமிஜி அன்னையிடம் சென்று அவரது ஆசிகளைப் பெற்றார். அன்னை அவரிடம், உன் தாயைச் சென்று பார்க்கவில்லையா?” என்று வினவினார்.
நீங்கள்தான் என் தாய்” என்றார் அவர். சுவாமிஜியுடன் இருந்த சுவாமி அகண்டானந்தரிடம் அன்னை, நான் என் பொக்கிஷத்தையே உன்னிடம் ஒப்படைக்கிறேன். உனக்கு இமயமலையில் நிலவும் சூழ்நிலை தெரியும். நரேன் அங்கு உணவின்றி வாடாமல் பார்த்துக் கொள்!” என்று கனிவுடன் கூறினார்.

அமெரிக்கா செல்லும்போது அன்னையின் அன்பான ஆசியுடன் சென்றார் சுவாமிஜி. உலகையே வேதாந்தப் பேரிகையால் வென்ற சுவாமிஜி அன்னை முன் ஒரு குழந்தைதான். அவர் ஒருமுறை அன்னையைத் தரிசிக்க வந்தார். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை. சுவாமி துரியானந்தர் தடுத்தும் கேளாது கங்கை நீரைத் தலையில் தெளித்துக்கொண்டு, அன்னையைத் தரிசிக்கும் முன் என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறேன்!” என்றார் சுவாமிஜி.

ஒருமுறை அன்னை பலராம் போஸ் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைக் காணத் தம்முடன் வந்திருந்த சுவாமி விஞ்ஞானானந்தரிடம் சுவாமிஜி அன்னையை வணங்கச் சொன்னார். அன்னையை முழந் தாளிட்டுப் பணிந்தார் விஞ்ஞானானந்தர். சுவாமிஜி, அன்னையை இவ்வாறா வணங்குவது?” என்று கூறிவிட்டுத் தாமே நெடுஞ்சாண்கிடை யாக விழுந்து வணங்கினார்.

சுவாமி பிரம்மானந்தர், ‘குருதேவரின் திரு வருளால் மட்டுமே அன்னையின் மகத்துவத்தை உணர இயலும்’ என்றார். அன்னையின் திருமுன் அவர் மெய் மறந்து விடுவார்.‘அன்னையின் கருணையைத்தான் என்னவென்று சொல்வது! அனைவரையும் கூவி அழைத்துத் தூய்மைப்படுத்தி மனவமைதி வழங்கும் ஜகத்தாத்ரி அல்லவா அவர்!’ என்பார்.

குருதேவரின் சீடர்களுள் அன்னையிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற சிலருள் சுவாமி யோகானந்தர் முதன்மையானவர். அவரைப் பற்றி அன்னை, யோகினைப் போல் என்னை நேசித்தவர் எவருமில்லை. அவனுக்கு யாராவது சிறிது பணம் கொடுத்தால், எட்டணாவாக இருந்தாலும் அதைப் பத்திரப்படுத்தி ‘அன்னையின் யாத்திரைக்கு இது பயன்படும்’ என்று கூறுவான்” என்பார்.
யோகானந்தரின் இறுதி நாட்களில் அன்னை பிள்ளையின் உடல்நலம் குறித்து வருத்தத் தோடு இருப்பார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மகிழ்வார். நிலைமை மோசமானால் அன்னையின் உடல் எடையும் குறையும்!

யோகானந்தர் பல ஆண்டுகளுக்கு முன் அன்னைக்குக் கொடுத்திருந்த ஒரு மெல்லிய பஞ்சுப் போர்வை நைந்து கிழிந்துவிட்டது. அன்னை அதனைப் பிரித்துப் புதிய பஞ்சு சேர்த்துத் தைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் அப்படிச் செய்ய வேண்டாமென்று தடுத்து அதை வாங்கிப் பாசத்தோடு அணைத்துக் கொண்டார்.என் மகன் யோகின் கொடுத்தது. அது எப்போதும் எனக்கு அவன் நினைவை ஊட்டிக் கொண்டிருக்கிறது!” என்றார்.

சுவாமி பிரேமானந்தர் வெளியூர்களுக்குச் செல்லும்போதெல்லாம் அன்னையின் அனுமதி பெற்றே செல்வார். ஒருமுறை பக்தர்கள் வங்காளத்திலுள்ள மால்தாவுக்கு அவரை அழைத்துச் செல்ல விரும்பினார்கள். அன்னையின் அனுமதி பெற உத்போதனுக்கு வந்தார் பிரேமானந்தர். அவரது உடல்நிலை சரியில்லாததால் அன்னை அனுமதி மறுத்தார்; பக்தர்கள் மன்றாடினார்கள். கடைசியில் பிரேமானந்தரிடம் அன்னை, நீ போக விரும்புகிறாயா?” என்றார்.

சற்றே உணர்ச்சி வசப்பட்ட பிரேமானந்தர், எனக்கு என்ன தெரியும்? நீங்கள் நீரிலே மூழ்கச் சொன்னாலும், நெருப்பிலே குதிக்கச் சொன்னாலும் நான் தயார். உங்கள் வாக்கே இறுதியானது” என்றார்.

அன்னை அவருக்கு அனுமதி அளித்தார்.
உலக அன்னையல்லவா இவர்! சாதாரணக் கிராமப் பெண் போல் முற்றத்தைக் கழுவுவது, பாத்திரங்களைத் துலக்குவது, உமி புடைப்பது மற்றும் பிள்ளைகளின் எச்சில் இடத்தைச் சுத்தம் செய்வது எல்லாம் இல்லறத் தார்க்கு அவர்களின் கடமையைக் கற்பிப்பதற்கே!” என்று பிரேமானந்தர் கூறினார்.

சுவாமி நிரஞ்ஜனானந்தர் அன்னையைக் கடைசியாகச் சந்தித்தபோது ‘அன்னை சமைத்ததை அவர் கையாலேயே சாப்பிட வேண்டும்’ என்று விரும்பினார். அவரது விருப்பத்தை அன்னை நிறைவேற்றினார்.

அன்னை பெங்களூர் சென்றிருந்தபோது, ஒரு நாள் மாலை ஆசிரமத்தில் இருக்கும் குன்றின்மீது அமர்ந்து இயற்கை அழகை ரசித்த வண்ணம் இருந்தார். இதை அறிந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ‘அன்னை இப்போது மலைமகள் ஆகி விட்டார்’ என்று கூறி தேவி சுலோகங்களால் அவரைத் துதித்தார். இறுதிக் காலத்தில் அன்னையைத் தரிசிக்கப் பேராவல் கொண்ட அவருக்கு அன்னை தரிசனமளித்து உய்வித்தார்.
சுவாமி திரிகுணாதீதானந்தர் அன்னையின் சேவையில் சிறிது காலம் ஈடுபட்டார். அந்த முரட்டுப் பிள்ளையின் அன்பு அலாதியானது.
ஒருமுறை அன்னை கொல்கத்தாவிலிருந்து பர்த்துவான் வழியே ஜெயராம்பாடிக்குச் சென்று கொண்டிருந்தார். காவலாளி போன்று அன்னையின் வண்டிக்கு முன் சென்றார் சுவாமிகள். நடு இரவு. மழையினால் பாதை அரிக்கப்பட்டு நடு நடுவே பள்ளமாக இருந்தது. பள்ளம் ஒன்றின் அருகே வண்டி வந்தது. அது பள்ளத்தில் இறங்கினால் அன்னையின் உறக்கம் கலையுமே! அதனால் தாம் பள்ளத்தில் படுத்துக் கொள்வதாக வும் வண்டியைத் தம்மீது ஓட்டும்படியும் வண்டிக்காரரிடம் கூறினார் சுவாமிகள். திடீரென விழித்த அன்னை வண்டியி லிருந்து இறங்கி முரட்டுத்தனமான செயலுக்காக மகனைக் கடிந்து கொண்டார்.

சாரதாவில் ஆனந்தராகவே இருந்த சுவாமி சாரதானந்தர் அன்னையின் சுமைதாங்கிகளுள் ஒருவர். அன்னை அவரைத் தமது வாசுகி என்பார். சரத் கல்கத்தாவில் இல்லையென்றால் நான் அங்கு செல்ல முடியாது. அவனைத் தவிர என் பொறுப்பு களை யார் ஏற்பார்?” என்பார்.
அன்னைக்கு சுவாமிகள் அவரது இறுதி மூச்சுவரை சேவை செய்தார். அன்னை தங்க கொல்கத்தாவிலும் ஜெயராம்பாடியிலும் இடம் அமைத்தார். அன்னை பிள்ளையிடம் வைத்திருந்த நேசத்தை விளக்கும் ஒரு சிறு நிகழ்ச்சி.
அன்னை உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது பக்தர் ஒருவர் அவரிடம் மந்திர தீட்சை தருமாறு வேண்டினார். அன்னை சில நாட்கள் கழித்து வரச் சொன்னார். இதுபற்றி சுவாமி சாரதானந்தரிடம் போய்ப் பேசுமாறு கூறினார்.

பக்தர் விடாப்பிடியாக, அப்படி யாரையும் எனக்குத் தெரியாது. நான் உங்களிடம்தான் வந்திருக்கிறேன். நீங்கள்தான் எனக்குத் தீட்சை தர வேண்டும்!” என்றார். உடனே அன்னை, சரத் எனக்கு மணிமகுடம் போன்றவன். அவன் சொன்னால்தான் நடக்கும்” என்று உறுதியாகக் கூறினார். வேறு வழியின்றி அவர் சுவாமிகளைக் கண்டு தீட்சைக்கான நாளைக் கேட்டு அறிந்தார்.

சுவாமிகள் அன்னை பற்றிக் கூறுகையில், அன்னை பராசக்தியைப் பற்றி நாம் என்ன அறிய முடியும்!” என்று உள்ளம் நெகிழ்வார். தமது பாடல் ஒன்றில் அன்னையின் திருவிளை யாடலைக் கண்டு அதிசயப்படுவதாகவும், சிரிப் பதா, அழுவதா என்று புரியவில்லை என்றும் கூறுகிறார்.
நம் சிற்றறிவினால் அன்னையை அறிய முடியுமா என்ன? எவரிடத்திலும் அப்படி ஒரு பற்றையும் பற்றின்மையையும் ஒரு சேரக் கண்டதில்லை!” என்கிறார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் கண்டெடுத்த ரத்தினங்களைத் தாய்மை என்ற நூலில் கோத்து மாலையாக்கி குருதேவருக்கே அர்ப்பணித்தார் அன்னை.
அரும்பெரும் முத்துக்களே அன்னையை அறிய இயலாதபோது நாம் என்ன சொல்வது! அன்னையே! உன் குழந்தைகளாகிய நாங்கள் உன் திருவடி பணிகிறோம். அருள்வாய். கருணைப் பேருருவே! உன் திருவடிகளில் எங்களுக்கு அடைக்கலம் தந்தருள்வாய்!”

Author: ப்ரவ்ராஜிகா ரமா ப்ராணா மாதாஜி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s