ஸ்ரீராமகிருஷ்ணர் போதித்த தத்துவம்

ஸ்ரீராமகிருஷ்ணர் போதித்த தத்துவம் என்ன என்று கூறுவது மிகவும் கடினம். ஆனாலும் இறைவனருளால் என்னால் இயன்றவரை கூறுகிறேன்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் தத்துவம் பற்றிப் பேசுவது எளிதல்ல. அனைத்து மதத்தினருக்கும் தத்தம் மதத்தின் மீதுள்ள ஈடுபாடு உறுதிப்பட வேண்டும் என்பதற்காகவே அவர், ‘எத்தனை மதங்களோ, அத்தனை வழிமுறைகள்’ என்று சொன்னதாகத் தோன்றுகிறது.

SwTuriy

பலவிதச் சமய சாதனைகளைச் செய்து, அவை அனைத்தும் ஒரே உண்மைக்கே அழைத்துச் செல் கின்றன என உணர்ந்த பிறகே அவர் இவ்வாறு கூறினார்.
பேருண்மை ஒன்று, இரண்டல்ல. அது பிரம்மம், பரமாத்மா, பகவான், கடவுள் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. உண்மை உணர்ந்தவர்கள் தங்கள் இயற்கையான சுபாவம், உணர்வுகள் ஆகியவற்றிற் கேற்ப அதற்கு ஒரு பெயர் அளித்து விளக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த முழுமையான உண்மையை விளக்க யாராலும் முடியவில்லை. அவனை முற்றி லும் உணர்ந்தவர்களால்கூட ‘அவன் (கடவுள்) அவனாக இருக்கிறான்’ என்று மட்டுமே கூற முடியும்.
வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்க்கும்போது கௌடபாதரின் ‘படைப்பின்மை’ (அஜாதவா தம்), ஸ்ரீசங்கரரின் ‘மாயா தத்துவம்’, ஸ்ரீராமானுஜரின் ‘உருமாற்றம்’, ஸ்ரீகாந்தரின் ‘சிவாத்வைதம்’ ஆகிய ஒவ்வொன்றுமே உண்மைதான். என்றாலும் அவற்றையெல்லாம் கடந்து சொல்லுக்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டவனாகவே அவன் உள்ளான்.

தத்துவங்களை நிறுவியவர்கள் அனைவரும் கடும் விரதங்களை மேற்கொண்டு, இறையருள் பெற்று, அவன் ஆணைப்படி பல கோட்பாடுகளை உபதேசித்தனர். இவை இறைவனிடமிருந்து தோன்றியவை. ஆனால் அவன் இந்தக் கோட்பாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.
இந்த உண்மையைக் கூறுவதே ஸ்ரீராமகிருஷ்ணரின் தத்துவம் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீராமனிடம் அனுமன், நான் என்னை ஓர் உடலாகக் காணும்போது உன் பணியாள்; ஒரு ஜீவனாக நினைக்கும்போது உன்னில் ஒரு பகுதி; (எங்கும் நிறைந்த) பிரம்மமாக உணரும்போது நீயே நான். இது என் திடமான முடிவு” என்றார்.
வெவ்வேறு ஆன்மிக அனுபவங்களின் முடிவும் இதுவே என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.

ஆராதிக்கும் மூர்த்திகள் அனைத்துமே சைதன்யம் நிறைந்த சுத்த பிரம்மம் என்று ஏன் உணர முடியாது? (இங்கே காளி கோயிலில் குருதேவர் கண்ட காட்சியை – ‘எல்லாம் சுத்த பிரம்மம்’ என்ற உணர்வைக் குறிப்பிடுகிறார்.)

அண்ட சராசரங்களிலும், உயிரினங்கள், உயிரற்றவை ஆகிய எல்லாவற்றிலும் இறைவன் வியாபித்துள்ளான். அவனன்றி ஏதுமில்லை. அவனே அனைத்தும் ஆவான். நாம் அவனைப் பார்க்க முடியாததால் பொருள்களையே காண்கி றோம். ஆனால் அவனே எல்லாம் என்பதுதான் உண்மை.
பெயர்கள், உருவங்கள் எல்லாம் அவனிடம் தோன்றுகின்றன;அவனிடமே உள்ளன. அலைகள், நுரை, நீர்க்குமிழிகள் எல்லாம் நீரே. ஆகவே உன் ‘மாயா தத்துவம்’ வாழ்ந்தாலென்ன, வீழ்ந்தாலென்ன? ‘அனைத்தும் பிரம்மமே’ என்று உணர்ந்தவன் அதைவிடத் தாழ்ந்த நிலையிலுள்ள எதனாலும் மனநிறைவு அடைவதில்லை.

எண்ணங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு நிலையை குருதேவர் உணர்ந்தார். அந்த நிலை உருவம், பெயர், சொல், சிந்தனை அனைத்தையும் கடந்தது; இயற்கையின் சாம்ராஜ்யத்துக்கு அப்பால், தன்னில் வேறல்லாத ஒன்றாக, ஒரே உண்மையாக விளங்குகிறது.
அந்த வேறற்ற நிலையில் மாயாவாதம், சிருஷ்டி தத்துவம் என்பதற்கெல்லாம் இடமில்லை. ஆயினும் இத்தத்துவங்கள் யாவும் அதனிடமிருந்தே தோன்றியுள்ளன.

இறைவன் ஒருவனே உண்மை, சத்தியம். அண்ட சராசரங்கள், உயிரினங்கள் அனைத்துக்கும் ஆதாரம் அவனே. அவனை மறக்காதவர்களுக்கு இந்த வெளிப்பாடு உண்மை. அவனன்றி ஏதும் இல்லாததால் அவனை மறந்தால் பெயர்களும் தோற்றங்களும் பொய்யாகி விடுகின்றன.
(நீ எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் அவற்றின் மதிப்பு பூஜ்யமே. ஆனால் அவற்றின் முன் ஒன்று என்ற எண்ணைப் போட்டால் அவற்றின் மதிப்பு அதிகரிக்கிறது. அந்த எண்ணே கடவுள் என்கிறார் குருதேவர்.)

இறைவன் நம் எண்ணங்களில் நிறைந்திருக்கும்போதுதான் ‘தண்டு பட்டைக்குச் சொந்தம், பட்டை தண்டுக்குச் சொந்தம்’ என உணர்கிறோம்.
(இது ஸ்ரீராமகிருஷ்ணரின் ஓர் உவமையைக் குறிப்பிடுகிறது. ‘வாழை மரத்தில் தண்டு உள்ளது. அதைச் சுற்றிப் பட்டைகளும் உள்ளன. இறைவன் பக்தனிடத்தில் அகங்காரத்தை, அதாவது நான் என்ற உணர்வை வைத்திருக்கும்வரை சாரமான தண்டு, சக்கையான பட்டை, இரண்டுமே உண்மைதான்.)

அந்நிலையில் கீதையின் கீழ்க்கண்ட கூற்றைப் புரிந்து கொள்ளலாம். ‘உலகிலுள்ள அனைத்திலும் நிறைந்துள்ளேன் (9-4). அவை நூலில் மணி போல் என்னிடம் கோக் கப்பட்டுள்ளன’ (7-7).

நாம் இறைவனைக் காண வேண்டும் என்பது தான் முக்கியம். அவனைக் காண்பதற்கு முன் நம்மிடம் எத்தனையோ ஐயங்கள், குழப்பங்கள், கோட்பாடுகள், கருத்து வேறுபாடுகள் உள்ளன. இறைவ னைக் காணும்போது இவையெல்லாம் மறைகின்றன. அவனே எல்லாம் என்ற உணர்வு ஏற்படுகிறது. அப்போது தடையற்ற நிலையான நிம்மதி, ஆனந்தம் கிடைக்கிறது.

ஆகவே, எந்த வழியிலாவது, பெருமளவு முயன்று நாம் கடவுளை அடைய வேண்டும் என்பதே ஸ்ரீராமகிருஷ்ணரின் தத்துவம் ஆகும். ‘அத்வைத தத்துவத்தை உன் ஆடையின் நுனியில் முடிந்து கொண்டு பின் எப்படி வேண்டுமானாலும் செயல்படு’ என்றார் குருதேவர்.

இதன் பொருள்: ‘நீ இறைவனை அடைந்த பிறகு எந்தக் கொள்கையையும் பின்பற்றலாம். அப்போது விடுதலை நிச்சயம். கட்டுகள் நீங்குகின்றன. மரணத்துக்குப் பின் நீ வேறு உடல் எடுப்பதும் எடுக்காததும் உன் விருப்பப்படி நடக்கும்’.

முக்தியை விரும்புபவர்கள் உலகை ஒரு கனவாகக் காண்கிறார்கள்; நிர்க்குண பிரம்மத்தில் மூழ்கி அதில் ஒன்றுகிறார்கள். சகுணப் பிரம்மத்தை ஆராதிப்பவர்கள் உலகை இறைவனுடைய சக்தியின் வெளிப்பாடாகக் கருதுகிறார்கள். சத்-சித்-ஆனந்தமான இறைவனுடன் இணைகிறார்கள். மீண்டும் மீண்டும் பிறப்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

இறைவனின் விளையாட்டுத் தோழர்களாக அவர்கள் தங்களைக் கருதிக்கொண்டு மீண்டும் அவனது தெய்விக விளையாட்டில் பங்கு கொள்ள வருகிறார்கள். ஆத்மானந்தத்தில் ஆழ்ந்தபடி இறைவனிடமும் பக்தி செலுத்துகின்றனர். இவ்வுலகில் வேறு எதையும் விரும்புவதில்லை. மோட்சம் கிடைத்தாலும் வேண்டாம் என மறுக்கின்றனர்.

(இது ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி துரியானந்தர், சுவாமி சர்வானந்தருக்கு வாராணசியிலிருந்து 18.4.1919 அன்று எழுதிய ஆங்கிலக் கடிதத்தின் தமிழாக்கம்.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s