சிவ தரிசனம் பெற்று சிவம் ஆனவர்!

சிவ தரிசனம் பெற்று சிவம் ஆனவர்!

LordSiva2

ஆன்மிகம் கோலோச்சவும், இயற்கையன்னை கொலுவீற்றிருக்கவும் செய்யும் தலம் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம்.

அந்தத் தலத்திலுள்ள குன்று ஒன்றின் மீது தியானம் செய்வதற்காக சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் புறப்பட்டார். வயது 18 ஆன இளைஞராக இருந்தாலும் ஞானத்தால் குருபீடத்திற்கு உகந்தவராக மிக விரைவாகப் பரிணமித்துக் கொண்டிருந்தார்.
தேவ தேவிகள் பலரைத் தியானத்தில் தரிசித்தவர் அவர்; குருவருளையும் திருவருளையும் கணந்தோறும் தம்முள் கூட்டிக் கொண்டிருக்கும் ஞானசூரியனாக, பக்திப் பிழம்பாக ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஜொலித்துக் கொண்டிருந்தார். அதனை அவரது குருவான பரமாச்சாரியார் (ஸ்ரீசந்திரசேகர பாரதி மஹாசுவாமிகள்) நன்கு உணர்ந்திருந்தார்.

SriAbhinavSwamigal
ஸ்ரீஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள்

அன்று தியானிக்கச் செல்லும் சீடரைக் குரு சைகையால் அழைத்தார். சீடர் குருமுன் பணிவுடன் கைகூப்பி நின்றார். குரு அவரை வாத்சல்யத்துடன் சிறிது நேரம் நோக்கிவிட்டு, சரி, நீ கிளம்பு” என்றார்.
சீடர் குருவைத் தண்டனிட்டு நமஸ்கரித்தார். குரு குனிந்து சீடரின் சிரசின் மீது தமது இரு கைகளையும் வைத்து ‘ஓம் நம: சிவாய’ என்று மும்முறை உச்சரித்தார்.
ஒவ்வொரு நாளும் தியானிக்கச் செல்லும்போதும் குருவிடம் ஆசி பெறுவார். ஆனால் இன்று மட்டும் குருவின் கடாக்ஷம் பொங்கிப் பிரவகிக்கிறதே என வியந்து அகம் மகிழ்ந்தார் சீடர்.

உடனே ‘இன்று சிவனைத் தியானிக்க வேண்டும்’ என்ற எண்ணம் அவருக்குத் தீவிரமாக உதித்தது. சீடர் தம் ஆசனத்தை எடுத்துக் கொண்டு குன்றிற்குச் சென்றார். அவரது உதவியாளரும் பின் தொடர்ந்தார். சிறிது தூரம் சென்றதும் குரு தமது திருக்கரங்களால் ஒலி எழுப்பி அழைத்தார். சீடர் நின்றார். ஆனால் குரு சீடரை நோக்கிச் சைகையால் ‘நீ போய் தியானம் செய்’ என்று கூறிவிட்டுச் சீடரின் உதவியாளரை மட்டும் வருமாறு அழைத்தார்.
மேற்கு திசை நோக்கிச் சீடர் அமர்ந்தார். அன்று சுக்ல தசமி. தூரத்தில் தெரிந்த மலஹானிகரேஸ்வரர் ஆலயத்தை இங்கிருந்தே வணங்கினார். அந்தச் சூழலே மிகவும் ரம்மியமாக இருந்தது. மேகம் இல்லாத வானம், மெல்லிய தென்றல், மெல்ல மெல்லக் கீச்சிடும் பறவைகள், இவற்றோடு நிர்மலமான சீடரின் அகம்…

அந்தி மெல்ல மெல்ல மங்கி வந்தது. சீடரின் அகமும் மெல்ல மெல்லக் கரைந்தது.
சித்தாசனத்தில் அமர்ந்த சீடர் தியானத்தைத் துவங்கும் முன் தம் குருவையும் சிவனையும் மானசீகமாக வணங்கினார். ‘ஓம் நம: சிவாய’ என்று முதலில் உச்சரித்தார். அப்போது அவரது இரு புருவங்களுக்கிடையில் ஒரு விதமான துடிப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவ்விடத்தில் பேரமைதியுடன் சந்திர பிம்பம் போன்ற ஒளி வட்டம் தோன்றியது.
மனம் மிக அமைதியுற்று ஒருமுகமாயிற்று. சீடர் தமது இதயத்தாமரை நன்கு மலர்ந்திருப்பதாக பாவித்துக் கொண்டார். அந்த இதயத்தாமரையில் ‘சாந்தம் பத்மாஸனஸ்த்தம்…’ என்ற தியான சுலோகத்தில் வர்ணிக்கப்
பட்டுள்ளவாறு பார்வதியுடன் ஐந்து தலைகளும் பத்து கரங்களும் உடையவராக சிவனைத் தியானித்தார்.

சிவ ரூபத்தில் மனம் ஒருமுகப்பட்டதும் சீடர் தமது உடல், சுற்றுப்புறம் பற்றிய உணர்வை இழந்தார். சிறிது நேரத்தில் அவரது மனதில் ஓடிக் கொண்டிருந்த பஞ்சாக்ஷரி மந்திரஜபமும் (ஓம் நம: சிவாய) நின்றுவிட்டது.
மனம் இதயத்திலிருந்த சிவனின் ரூபத்தில் முழுவதுமாக ஒன்றிவிட்டது. சட்டென்று அந்த உருவம் தெள்ளத் தெளிவாகத் தோன்றியது. ரூபத்தை மனதில் தக்க வைத்துக் கொள்வதற்காக முயற்சி ஒன்றும் அவருக்குத் தேவைப்படவில்லை.

பத்மாசனம், சிரசில் பிறைச்சந்திரன், ஐந்து முகங்கள், முக்கண், பாம்பு, பாசம், மணி, பிரளயத்தீ மற்றும் அங்குசத்தை அலங்காரங்களாகக் கொண்டு சாந்தமே வடிவாக ஈசன் காட்சி தந்தார்! சீடர் ஆனந்தத்தில் மூழ்கினார்.
அந்த ஆனந்த நிலையில் சுமார் ஒன்றரை மணி
நேரம் சீடர் இருந்தார். பின்னர் மெல்ல மெல்ல உடல் உணர்வு திரும்பியது. கண்களைத் திறந்து பார்த்தார். மேற்கில் சூரியன் ‘நான் மறையலாமா, எனக்கு விடை தாருங்கள்’ என்று பணிவாகக் கேட்பது போலிருந்தது.

கண்கள் திறந்திருந்த போதிலும், சீடர் தமது இதய கமலத்தில் சிவபெருமான் அம்பாள் சமேதராக வீற்றிருப்பதை நன்கு உணர்ந்தார். புற உலக உணர்வு மிக மிகக் குறைவாகவே இருந்தது.

அப்போதுதான் ஓர் அற்புதம் நிகழ்ந்தது!
திடீரென்று உள்ளே இருந்த இறைவன் வெளிவந்து தமது தோற்றத்தைப் பெரிதாக்கிக் கொள்வதைச் சீடர் உணர்ந்தார். நீண்ட ஆழ்ந்த ஓம் எனும் உச்சாரணம் அவரது செவிகளில் ஒலித்தது.

ஓ, எத்தகைய அற்புதமான தரிசனம் அது! திடீரென சீடரின் முன்பு சிவபெருமானே தோன்றிவிட்டாரே!
சீடரின் கண்களிலிருந்து தாரை தாரையாக ஆனந்தக் கண்ணீர்; அங்கமெல்லாம் மெல்ல ஆடியது.
அப்போது பகவானின் திருவதரங்கள் இனிமையாக அசைந்தன. அவர் அன்புடன் சீடரிடம் பேசினார்:

வத்ஸ, ச்வ: ப்ரப்ருத்யத்ர நிராகாரே பரே தத்த்வே மன: நி
ஸமாதத்ஸ்வ அசிரேண ப்ரஹ்மஸம்ஸ்த்தோ பவிஷ்யஸி

மகனே! நாளை முதல் இவ்விடத்தில் உன் மனதை உருவமற்ற பரம்பொருளில் இருத்துவாய். சீக்கிரமே நீ பிரம்மத்தில் நிலைபெறுவாய்” என்றார் பகவான். பிறகு தமது திருக்கரங்களைச் சீடரின் சிரசில் வைத்து ஆசீர்வதித்து மறைந்தளிருனார்.

ஆஹா! பெருமானின் கருணையே கருணை என்று சீடர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். சிவ தரிசனம் மறைந்த அடுத்த கணமே அப்பகுதியில் தூறல் ஆரம்பித்தது. சிவனது கருணை மழை சீடரை நனைத்தது; வான் மேகமும் தனது ஆனந்தத்தால் அப்பகுதி முழுவதற்கும் தூறல் பொழிந்து லேசாக நனைத்தது.

ஆனந்த பரவச நிலையில் இருந்த சீடரின் மனதில் சிவன் மீது தாமாகவே சில துதிகள் எழுந்தன. அவற்றை உணர்ச்சியுடன் அவர் துதித்துப் பாடினார். துதி பாடி முடிந்ததும் மீண்டும் தியானிக்க வேண்டும் என்ற உந்துதல் சீடருக்கு ஏற்பட்டது.

இறைவனே அவருக்கு குரு வடிவில் வந்து உபதேசித்ததால் அவர் இறைவனை, குருவாம் தக்ஷிணாமூர்த்தி ரூபத்தில் தியானிக்க எண்ணினார். அதனால் மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை உச்சரித்தார். ஜப மாலை, அமிருத கலசம், புஸ்தகம் மற்றும் சின்முத்திரையுடன் கூடிய திருக்கரங்களுடன் தமது இதயத்தாமரையில் தக்ஷிணா
மூர்த்தியைத் தியானித்தார்.

சுற்றுப்புறம், உடல் பற்றிய உணர்வு நீங்கியது. மானசீகமாக உச்சரித்துக் கொண்டிருந்த மந்திரம், தானாக நின்றுவிட்டது. சீடரது கவனம் சிவரூபத்தில் மட்டுமே நிலைத்திருந்தது. மனதை ஓடச் செய்யும் வேறெந்த எண்ணமும் இல்லை. தியானம் மிக ஆழமாக இருந்தது. சிவனது ரூபமோ தெள்ளத் தெளிவாக இருந்தது.

பின்னர் உடல் பற்றிய உணர்வு ஏற்பட்டுச் சீடர் கண்களைத் திறந்தார். அப்போது சந்திரனின் ஒளியால் அப்பிரதேசம் ஒளிர்ந்தது. நட்சத்திரங்கள் மின்னின.

சில கணங்கள் கழித்து, சீடரது கழுத்தில் ஏதோ ஒன்று இருப்பதை அவர் உணர்ந்தார். ஆ, அது என்ன?
பெரிய நாகப்பாம்பு அல்லவா அது! அந்தப் பாம்பு அவரது கழுத்தைச் சுற்றி அமர்ந்திருந்தது. அதன் படமானது அவரது வலது தோளின் அருகே எதிர்த்திசையை நோக்கியவாறு இருந்தது.

சீடர் சிறிதும் பரபரப்பின்றி அமைதியாக சிவனின் அருளை அனுபவித்துக் கொண்டிருந்தார். ஆம், சீடர் ‘புஜங்கபூஷணர்’ ஆனார். (பாம்பை ஆபரணமாக அணிந்தவன் என்பது சிவனின் நாமங்களுள் ஒன்று.)

சிவன் மீது தியானம் செய்ததால் நாகமே அவர் மீது ஓர் ஆபரணமாக வந்தமர்ந்தது! இதை இறைவன் அருளின் ஓர் அறிகுறியாகக் கருதி அவர் மகிழ்ந்தார்!
கழுத்தைச் சுற்றியிருந்த நாகத்தை மெதுவாகத் தடவிக் கொடுத்தார். அந்த ஸ்பரிசம் அதற்குப் பிடித்திருந்ததுபோலும். அது அவரது வலது கன்னத்தின் மீது தனது தலையைச் சாய்த்துக் கொண்டது!

நாகம் ஐந்து நிமிடங்களுக்குப் பின் அவரது கழுத்திலிருந்து இறங்கிச் சென்றுவிட்டது.

பிறகு சீடர் குன்றிலிருந்து அமைதியாக இறங்கி வந்தார். அடிவாரத்தில் அவரது உதவியாளர் விளக்குடன் காத்துக்கொண்டிருந்தார். தினமும் சீடர் தியானத்திற்குச் செல்லும்போதே உதவியாளரும் செல்வார். ஆனால் இன்றோ அவர் குன்றின் அடிவாரத்தில் விளக்குடன் காத்திருக்கிறாரே என்று சீடர் யோசித்தார்.

உதவியாளர் விளக்கினார். குரு உதவியாளரிடம் இரண்டரை மணிநேரம் கழித்து விளக்குடன் சென்று சீடருக்காகக் காத்திருக்கும்படி கூறியிருந்தார். இதைக் கேட்டதும், தாம் எவ்வளவு நேரம் தியானிப்போம் என்பதைக் குரு துல்லியமாகக் கணித்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு சீடர் வியந்தார்.

மறுநாள் காலை ஆஹ்னிகம் முடிந்த பிறகு தம் அனுபவத்தை குருவிடம் கூற விரும்பினார். ஆனால் அதற்குள், சில விநாடிகளில் ஆசாரியர் சீடரை அழைப்பதாக ஒருவர் வந்து கூறினார். சீடர் குருவைத் தரிசித்தார்.
ஆசாரியர் அப்போது ஜபித்துக் கொண்டிருந்தார். ஜபம் முடிந்த பிறகு சீடரிடம் புன்சிரிப்புடன், இன்று நீ பரமேஸ்வரனின் அதிவிசேஷமான அனுக்கிரகத்துக்கும் உபதேசத்துக்கும் பாத்திரமாகி உள்ளாய். அதோடு சற்று நேரத்திற்கு நீ புஜங்கபூஷணராக இருந்தாய், அல்லவா?” என்றார்.

சீடர் வியந்து, ஆம்” என்று கூறி மௌனமானார். பிறகு, மேலே நடந்தவையெல்லாம் தான் தியானம் செய்யப் புறப்படுவதற்கு முன் குரு செய்த ஆசீர்வாதத்தின் விளைவுகள்தானா என்று அவரிடம் கேட்டார்.

ஆசார்யர் தலையசைத்து, தியான அனுபவத்தில் சீடருக்கு என்ன நடந்தது என்பது தமக்குத் தெரியும் என்பதை உணர்த்தினார். மேற்கொண்டு அவரிடம் கூற ஒன்றுமில்லை என்று சீடர் மௌனமானார்.

சரி, சாயங்கால ஸ்நானத்திற்கு நேரமாகிவிட்டது. நீ புறப்படு” என்றார் குரு. சீடர் விடைபெற்றார்.

அன்றிரவு சீடருக்கு ஒரு கனவு. தமது அனுபவத்தை அவரே கூறுகிறார்:
கனவில் நடராஜ ரூபத்தில், சிவன் மிக அழகாக நர்த்தனம் செய்தார். அம்பாள் அதனைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். சற்று நேரத்தில் காட்சி மாறியது. அதில் சிவன், அம்பாளுடன் அர்த்தநாŽஸ்வரராகக் காட்சியளித்தார். கனவிலேயே சிவனையும் சக்தியையும், பகவத்பாதாளின் அர்த்தநாŽஸ்வர ஸ்தோத்திரம் சொல்லித் துதித்தேன்.
பிறகு மீண்டும் காட்சி மாறியது. ஆல மரத்தினடியில் அமர்ந்திருந்த தக்ஷிணாமூர்த்தியின் வடிவில் இறைவனை நமஸ்கரித்தேன். பிறகு நான் இறைவனுடன் ஒன்றிவிடுவதாகக் கண்டேன்.

கடவுளுடன் ஒன்றிவிட்டபோது, கனவும் முடிந்து நான் உறக்கத்திலிருந்து எழுந்தேன். அப்போது காலை 4.30 மணி. அன்று ஏகாதசி நாள். அன்று மாலை பகவானின் ஆக்ஞைக்கிணங்க, நான் நிர்குணப் பரம்பொருளின் மீது தியானம் செய்யத் துவங்கினேன்.”

(ஆதார நூல்: யோகமும் ஞானமும் ஜீவன்முக்தியும்)
இவ்வாறு ஸ்ரீஅபிநவவித்யாதீர்த்த சுவாமிகள் குருவருளையும் திருவருளையும் பெற்று ஆயிரக்கணக்
கான ஆன்மிக சாதகர்களுக்கும் பக்தர்களுக்கும் தோன்றாத் துணையாக நின்று இன்றும் வழிநடத்தி வருகிறார்.
ஈசுவரனைக் காண்பதற்கு முன்பு, அந்தத் திவ்விய தரிசனத்தின் முதல் அங்கமாகக் குருவைத்தான் சீடன் காண்கிறான். பிறகு அந்தக் குருவே ஈசுவரனாக
மாறி, ஈசுவர சொரூபத்தைக் காட்டுகிறார். பிறகு ஈசுவரனும் குருவும் ஒருவரே என்று சீடன் தெரிந்து கொள்கிறான். அவன் விரும்பும் வரமெல்லாம் குரு அருள்வார்.
இதோடு, சீடனை நிர்வாணமாகிய பரமானந்த சுகத்துக்கும் அழைத்துச் செல்வார் அல்லது பக்தன், ஈசுவரன் என்ற சம்பந்தமுள்ள துவைத நிலையில் அவன் இருக்க வேண்டினாலும் அவ்வாறே இருக்கலாம்” என பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் கூறுகிறார்.
இவ்வாறு எத்தனையோ மகான்களைக் கொண்டது நம் நாடு. அப்படிப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சிவனருளைப் பெருக்கிக் கொள்வோம். *

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s